Monday, 29 May 2023

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தன்னிகரில்லாத தலைவர் 16 வயதில் துறவியாக வேண்டும் என விரும்பி வீட்டை விட்டு வெளியேறியவர் யார் இவர்???

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தன்னிகரில்லாத தலைவர் 16 வயதில் துறவியாக வேண்டும் என விரும்பி வீட்டை விட்டு வெளியேறியவர் யார் இவர்???

துறவியாக விரும்பி, ஞானியாக வாழ்ந்து, மாவீரனாக மாறி, சுதந்திர போராட்ட தியாகியாக பரிணமித்து, விண்ணில் எரி நட்சத்திரமாய் பிரகாசித்து கொண்டிருக்கும் ஓர் உத்தமத் தலைவர். ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள்… உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்’’ என்று முழங்கியவர் தான் நமது தேசதந்தை நேதாஜி. 

நேதாஜி கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதற்காக பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார். இதனால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது உள்ள IAS தேர்வை போன்றது. ஆங்கிலேயர்கள் மட்டும் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுமாறு பாடத்திட்டங்களை வைத்திருந்தனர்.  

ICS நுழைவுத்தேர்வில் பங்கேற்ற நேதாஜி இந்தியாவிலேயே நான்காவது மாணவராக தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார். 

சுதந்திர போராட்டத்தில் தேசத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை போட்டியிடச் செய்தார் காந்திஜி. நேதாஜி தேர்தலில் வெற்றிபெற்றார். இதனால் கோபமுற்ற காந்தி ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி’ என்று அறிவித்துவிட்டு காங்கிரஸ் மாநாட்டுக்கே போகாமல் ஒதுங்கி நின்றார் . காந்திஜியின் கோஷ்டியைச் சார்ந்த காரியக் கமிட்டி உறுப்பினர்கள் 12 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் மனமுடைந்த நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி நேதாஜியை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே மூன்று ஆண்டுகளுக்கு விலக்கி வைத்தது.

அதன் பின்னர் சுபாஷ் ‘பார்வர்டு பிளாக்’ கட்சியைத் தொடங்கினார். 44 வயதில் பாரத தேசத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றார். ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து தற்காலிக சுதந்திர அரசை அமைத்து, இந்திய தேசிய ராணுவத்தை திரட்டி, போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையைப் படைத்தார்.

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜெர்மனி சென்று ஹிட்லரைச் சந்தித்தார். இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் என்று ஜெர்மன் சர்வாதிகாரி சொன்னதற்கு, “சுதந்திர பாரதத்தை உருவாக்க மட்டுமே உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தாரார் நமது தேசபிதா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

 

 இந்திய தேசிய ராணுவத்தை அமைத்திருந்த ராஷ் பிஹாரி போஸ் உதவியுடன் மீண்டும் அதனை அமைத்து, அப்படையைக் கொண்டு பிரிட்டீஷ் இந்திய அரசு மீது போர் தொடுத்தார் நேதாஜி. அப்போது அவர் அளித்த முழக்கம் தான் ‘டெல்லி சலோ’. 

1945, ஆக. 18-ம் தேதி ஒரு விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தைவான் அரசோ அப்படி அன்று ஒரு விமான விபத்தே நடைபெறவில்லை என்றது. இதுவரை நேதாஜி மறைவு குறித்து 12 கமிஷன்கள் விசாரித்துள்ளன. ஆனாலும் அவரது மரணம் இன்றும் மர்மமாகத் தான் உள்ளது. அந்த மாவீரன் இறக்கவில்லை நாம் ஒவ்வொரு கணமும் சுவாசிக்கும் சுதந்திர காற்றில் வாழ்ந்து வருகிறார்..

இந்த உலகம் உள்ளவரை நேதாஜியின் புகழ் நிலைத்து நிற்கும்...வாழ்க பாரதம்



Sunday, 28 May 2023

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.

 எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 

இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர் குதிராம் போஸ் . ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார்; உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டு தப்பி விட்டனர் . அதில் இருந்தது கிங்க்ஸ்போர்ட் மனைவி மற்றும் மகள் . அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கைகொண்டவர் குதிராம் போஸ் . இதனால் மிகவும் மனம் வருந்தினார் குதிராம் போஸ் .


பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்து விட வழக்கு விசாரணைக்கு பிறகு குதிராம் போஸ்க்கு தூக்கு என ஆங்கிலத்தில் அறிவித்தார் நீதிபதி.



“ஏன் சிரிக்கிறாய் ?நான் சொன்னது புரிந்ததா ?”என கேட்க ,”நன்றாக புரிந்தது “என சொல்ல, இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என அவர் கேட்க ,”வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்” என சொல்லி ”என் வருத்தமெல்லாம் Majistrate Kingsford தண்டனைப் பெறாமல் தப்பிவிட்டான் எனபதே”. என அவன் சொன்ன பொழுது வயது பதினெட்டு தான் . 


குதிராம் போஸ் தூக்கிலிடபட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம்.

உன் பெயர் என்ன??ஆசாத் உன் தந்தைப் பெயர் என்ன??சுதந்திரம் உன் முகவரி என்ன??" சிறை"


 உன் பெயர் என்ன??ஆசாத்

உன் தந்தைப் பெயர் என்ன??சுதந்திரம் 

உன் முகவரி என்ன??" சிறை" 


அந்த கோர நிகழ்வு 1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை என்னும் பெயரில் நிகழ்ந்து.. இந்தியாவின் அம்ரித்சர் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு 'ரெஜினால்ட் டையர் ' என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.

 இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சந்திரசேகர சீதாராம் திவாரிக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. பிறகு, ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டு தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதிபதியிடம் கொண்டு செல்லப்பட்டார். 


நீதிபதி சந்திரசேகர சீதாராம் திவாரியிடம் உன் பெயர் என்ன என்று கேட்க "ஆசாத் என்று கூற (ஆசாத் என்றால் விடுதலை), தந்தைப் பெயர் என்ன என்று கேட்க சுதந்திரம் என்றார் உன் முகவரி என்ன என்று கேட்டபொழுது  " சிறை" என்றார். இதனால், கோபமுற்றநடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி..மேலும்்கடுப்பான  நீதிபதி 

15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் "பாரத்மாதாகீஜே" என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப் பற்றை வெளிபடுத்தினார். 

அன்று முதல், அவர் 'சந்திரசேகர ஆசாத்' என அழைக்கப்பட்டார். 

 பகவத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் பின்னனயில் இருந்து அவர்களை வழிநடத்தியவரும் இவரே. 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் அலகாபாத்திலுள்ள "அல்ப்ரெட்" பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றி வளைக்கப்பட்ட அந்த சிங்கம் 

நீண்ட நேரம் ஆங்கில காவல்துறையினரிடம் போராடியது காலில் குண்டடிபட்டு தப்பி செல்ல முடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், அவர்களிடம் சிக்கி விடகூடாது என நினைத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். சந்திரசேகர ஆசாத் மறைந்துவிட்டாலும் அவர்விட்டு சென்ற சுவடுகள் இன்னும் மறையாமால் தான் இருக்கின்றன. 

Friday, 26 May 2023

காவலர் to IAS அதிகாரி???

 காவலர் to IAS அதிகாரி??? 


2022 ஆம் ஆண்டு நடைப்பெற்ற upsc தேர்வுக்கான முடிவு வெளிவந்துள்ளது. முதல் 4 இடங்களை  பெற்று பெண்கள் பெருமை சேர்த்துள்ளனர்...

அகில இந்திய  அளவில் முதல் 100 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் இடம்பெறவில்லை என்பது சற்று வருத்தம் தந்தாலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் upsc  தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே பாராட்டுதலுக்கு உரியவர்கள் ... 

அதிலும் வேலையில் இருந்துக்கொண்டே படித்து தேர்ச்சி பெற்ற ஒருவரை  பற்றிய பதிவுதான் இது..


ராஜஸ்தானைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான ராம் பஜன் குமார், கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சாதரண கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார் . அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று தலைமைக் காவலர் ஆனார். 

இதனிடையே தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை upsc  தேர்வுக்காக இவர் தொடர்ந்து படித்து வந்துள்ளார். காவல்துறையில் பணியாற்றி  கொண்டே  கிடைக்கும் நேரங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக விடாமுயற்சியுடன் படித்து தற்போது தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 


இதுவே ஆக சிறந்த வெற்றி ... படிக்க நேரம் போதவில்லை என கூறி கொண்டே செல்பேசியில் முழுகி இருக்கும் நம் வீட்டு பிள்ளைகளுக்கு கூறுங்கள் இவரது வெற்றியை...



Sunday, 21 May 2023

நந்த வனத்திலோர் ஆண்டி

 ஏன் பிறந்தோம்???

இந்த கேள்வி சற்று கடினமான கேள்விதான்.. ஏன்னா ரொம்ப சலுச்சிட்டு நமக்கு மட்டும் தான் அடுக்கு அடுக்கனா துன்பம் வருது?அது இது அப்படி இப்படினு சொல்லிட்டுதான் வாழ்ந்து வருகிறோம்...நம்முடைய பலத்தை அறியாமலே கோவிலுக்கு சென்று சாமிகிட்ட எனக்கு அது வேணும் இது வேணும்னு பிச்சை எடுக்கிறோம்...???

இது நான் சொல்லலங்க கடுவெளி சித்தர் பின்வரும் பாடலில் சொல்கிறார் ..


நந்த வனத்திலோர் ஆண்டி- அவன்l நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

 கொண்டு வந்தான் ஒரு தோண்டி- மெத்த

கூத்தாடி கூத்தாடி போடுட்டைத்தாண்டி!


இதற்கு விளக்கம் என்னனா?

நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான், நம் உடம்பு தான் அந்தத் தோண்டி, நாம் இறைவனிடம் எனக்கு மனிதப் பிறப்பை அளித்தருள்வாய் அப்பொழுது தான் என்னால் பல நல்ல காரியங்களைச் செய்ய இயலும் என்று வேண்டி பத்து மாதம் கருவறை சுவாசத்திற்குப் பிறகு இந்த பூமிக்கு வருகிறோம். 

வந்த மாத்திரத்தில் நாம் இறைவனிடம் வேண்டியதையும், இந்த உடல் எவ்வளவு உன்னதமானது என்பதையும் மறந்து விட்டு அளவில்லாமல் உண்பதும், வெட்டிப் பேச்சு பேசி பொழுதைப் போக்குவதும், நமது சிற்றின்பத்திற்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்து சுய நல வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து மடிகிறோம். 


ஆனால் விலைமதிக்க முடியாத உடலை பெற்ற நாம் வாழ்கையில் ஒரு போதும், இந்த உடம்பை வைத்து இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம், என்ற எண்ணமே தோன்றுவதில்லை என்று கடுவெளி சித்தர் கூறுகிறார்...

Wednesday, 17 May 2023

ஐந்தே வரியில் நிலையாமைபுறநானூறு பாடலில் எப்படி ???


 ஐந்தே வரியில் நிலையாமைபுறநானூறு பாடலில்  எப்படி ???

"அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்,

இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

இந்த பாடலின் பொருள் தெரிந்துக்கொள்ள கீழே உள்ள கதையை முழுமையாக வாசித்துவிட்டு வாருங்கள்..

பறம்பு மலையை  மூவேந்தர்கள்  வியக்கும் வண்ணம் ஆட்சி செய்துவந்தார் பாரி. கடையேழு வள்ளல்களில் ஒருவனாகப் பாடப்பட்டவர் பாரி இதனால்  மூவேந்தர்களுக்கு பாரியின் மீது ஒரு பொறமை. . எல்லாப் புலவர்களும்  பாரியை  பற்றியே பாடிக் கொண்டு இருந்தனர். இது போதாதா பகைமைத் தீயை வளர்க்க ?  சேர, சோழ,பாண்டியர்கள்  நாடு முழுக்க ஆண்டவர்கள். ஆனால் பாரி 3௦௦ கிராமங்களை மட்டும்  கொண்ட  பறம்பு நாட்டு மன்னன் பாரிக்கு  இவ்வளவு புகழா? என்று எண்ணி பாரியை போரில் வீழ்த்தமுடியாத என்பதால்   பல்வேறு சூழ்ச்சிகள் செய்து பாரியை  அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பாரிக்கு இரண்டு மகள்கள். அங்கவை, சங்கவை. அழகும், அறிவும் நிரம்பப் பெற்றவர்கள். பாரியைப் போன்றே ஈகை குணம் கொண்டவர்கள்.


 மூவேந்தர்களும் தனித்தனியாக  பாரியிடம் சென்று பெண் கேட்டனர். அவர்கள் மூவர்க்கும் , பட்டத்து ராணிகளும் இருந்தனர் .  இருந்தாலும் பறம்பு மலையை தன் வசமாக்கிக் கொள்ள அந்த இரண்டு பெண்களைக் கேட்டனர். பாரி மறுத்தான். இதற்காகவே காத்து இருந்த மூவேந்தர்கள் பறம்பு நாட்டின் மீது போர் தொடுத்தனர். 

பறம்பு நாட்டின் கோட்டைகளை சுற்றி முற்றுகை இட்டனர். நாட்கள்தான் போனதே தவிர கோட்டையை பிடிக்க முடியவில்லை. ஆனால் பறம்பு நாட்டு மக்கள் அவதிப்பட ஆரம்பித்தினர்.

சங்கப் புலவர் கபிலர் பாரியின் உற்ற நண்பர். அவர் பாரியின் சார்பாக மூவேந்தர்களை சந்தித்து போரை நிறுத்தும்மாறு கேட்டு கொண்டார். பாரியின் பெருமையை எடுத்துக் கூறினார். அப்பிடிக் கூறும் போது பாரி புலவர்கள் கேட்டால் நாட்டையே கொடுத்து விடுவான் என்று ஒரு வார்த்தை சொல்லுகிறார். மூவேந்தர்களும், புலவர்கள் போல வேடம் இட்டுக் கொண்டு பாரியின் கோட்டைக்குள் சென்று பாரியைச் சூழ்ந்து கொன்று விடுகின்றனர்.


பறம்பு நாட்டினை  பிடித்துக்கொண்ட மூவேந்தர்களும்  பாரி மகளிரை அரசவையில் வைத்து அவமானப்படுத்தி வெளியே துரத்தி விட்டனர். கபிலர் மனமுடைந்து போகிறார்.  பாரி மகளிரை மனதில் கொண்டு அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார். 

 ஆனாலும்  மூவேந்தர்களுக்கு பயந்து எந்த குறு நில மன்னர்களும் பாரி மகளிரை மணம் புரிய முன் வரவில்லை  திருக்கோயிலூர் மலையமான், காரி  முன் வந்து அங்கவையை மணம் புரிந்தார்.இருப்பினும் கடுங்கோபமுற்ற   மூவேந்தர்கள் மூவரும்  காரியை கொன்று விடுகின்றனர். இதனால் மனமுடைந்த  அங்கவை தீக்குளித்து இறந்து போகிறாள். 

கபிலர் சங்கவையைச் தனது சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு  அதே திருக்கோயிலூரில் வடக்கிருந்து தற்கொலை செய்து கொண்டார், கபிலர். 

மீண்டும் பாடலை மீள் வாசிப்பு செய்து பாருங்கள் ஐந்தே வரிகள்தான். அன்று  வந்ததும் இதே நிலாதான், ஆனால் அப்போது எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார், எங்கள் குன்றிலும் பிறர் ஆக்கிரமிக்கவில்லை. அனால் இன்று  வந்திருப்பதும் அதே நிலாதான். இப்போது, வெற்றி ஒலி செய்யும் முரசைக் கொண்ட மூவேந்தர்கள் எங்கள் குன்றைக் கைப்பற்றிக்கொண்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்துவிட்டோம்.   இரவிலிருந்து மீண்டும் மறு இரவு வருவதற்குள் தங்கள் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுவிட்டது என்று வாழ்வின் நிலையாமையை எவ்வளவு அழகாக விளக்கியுள்ளனர் பாரி மகளிர்.


Tuesday, 16 May 2023

வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே


 வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும்  கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் அன்னை சிவசக்தியிடம் சுடர்மிகு அறிவுடன் பிறந்துவிட்ட என்னால்  இவ்வுலகம் பயன் பெறவேண்டும். அவ்வாறு இல்லாமல்  நான் பிறந்த இம்மண்ணுக்கு சுமையாக இருப்பதில் அர்த்தமில்லை.அதற்கு நான் வேண்டியபடி செயல்பட மனம் கேட்கிறேன்.அதை செயல்படுத்த உடல் வேண்டும், உயிர் வேண்டும்  என் தசையினை தீச்சுடும்  போதும் உன்னை பாடும் உள்ளம் வேண்டும். அதை அருள்வதில் உனக்கு என்ன  தடை இருக்கிறது. இவ்வாறு எனக்கு அருளவில்லை என்றால்  நல்ல வீணையை செய்து அதை தூக்கி குப்பையில்  எறிவது போலாகும். என்று பின்வரும் கவிதை வரிகளில் தன்னுடைய சுதந்திர வேட்க்கையை வெளிப்படுத்துகிறார் பாரதியார்.


நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ 

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ 


விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்

நசையறு மனம் கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் 

தசையினைத் தீச்சுடினும் - சிவ

சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்

அசைவுறு மதி கேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ


கரிகாலனின் தோல்வி ???சேரமான் பெருஞ்சேரலாதனின் வெற்றி??? வெண்ணிக்குயத்தியார் கூறுவது என்ன???

 கரிகாலனின் தோல்வி ???சேரமான் பெருஞ்சேரலாதனின் வெற்றி??? 

வெண்ணிக்குயத்தியார் கூறுவது என்ன???


              கரிகாலன் தந்தை  இளஞ்சேட்சென்னி  உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்.  கரிகாலன் தாய்   வயிற்றில் இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார்.   பிறக்கும் முன்பே அரசுரிமையை பெற்றார் . சிறுவயதில் இவன் தனக்குரிய அரசினை   இழந்து  தன் மாமனாகிய இரும்பிடர்த்தலையார் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்தார் .

                          இளமைக்காலத்தில் இவன்   உறவினர்கள் கரிகாலனை சிறையிலிட்டு நெருப்பு வைத்தனர்.    இந்நெருப்பில் இருந்து  தப்பி குறித்து ஓடியபோது கால்    கரிந்துவிடவே  கரிகாலன் என்று அழைக்கப்பட்டார்.

                         கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை.

                      புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் இருந்தே எதிரிகளை வீழ்த்த பால பாடம் கற்று கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் வளர்ச்சியடைந்து  புகழும் பெருமையையும் அடைந்தார். 

                           கரிகாலன் அரசியலில் வேர் ஊன்றுவதற்கு முன்னரே இவரது அரசியல் எதிரிகள் பல திட்ட்ங்கள் தீட்டி சேர பாண்டியர்கள் ஓன்று சேர்ந்து இவரை அழித்துவிட கோவில்வெண்ணி என்னும் இடத்தில் போர் தொடுத்தனர்..

                               அனால்,விதி வலியது.. சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை கரிகாலன்  முறியடித்தார்.

                         இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதிதற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் தோற்றவன் வெற்றி! பெற்றான் என்று பின்வரும் பாடலை பாடினார்.

 நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக

களியியல் யானைக் கரிகால் வளவ

சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற

வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப்புகழ் உலகம் எய்திப்

புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.

 இந்த பாடலின் பொருள்

               காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?

              பெருஞ்சேரலாதனும் உன்னைப் போலப் பேரரசன்தான். போர் நடந்து கொண்டிருக்கும்போதே மார்பில் தைத்த அம்பு முதுகிலே ஊடுருவி நுழைந்துவிட்டதனால், “ஆகா முதுகிலே புண்பட்ட நானும் ஒரு வீரனா? எதற்காக மானமிழந்த நான் உயிர் வாழ வேண்டும்? வெற்றி விளைந்தாலும் இனி எனக்கு அது தோல்விதான் என்றெண்ணி வடக்கிருந்து உயிர் துறந்தான். வெற்றி தோல்வியைவிட, ஏன்? உயிரைவிட, மானமே பெரிதாகத் தோன்றியது அவனுக்கு. தோற்று இறந்தானில்லை அவன். தன் மானத்தைக் காப்பதற்காகத் தன்னைத்தானே மாய்த்துக்  கொண்டான். போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு வெட்கப்பட்டு  அவன் வடக்கிருந்து உயிர் துறந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் ? என்று  கூறுகிறார்.

          நன்றி அடுத்தபதிவில் சந்திக்கிறேன்...

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...