மயக்கமா? கலக்கமா?
குறள் 611
இந்த குறளின் பொருள்
ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அச்செயலின் நம்பிக்கையும் குன்றாமல் எப்பேர்ப்பட்ட இடர்கள் வந்தாலும் தளர்வடையாமால் சோம்பல்கொள்ளாமல் அச்செயலை செய்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்து கொண்டு இருந்தால் நம்முடைய முயற்சிக்கான பலனாக வெற்றி கிட்டும்.
இந்த குறளுக்கு உதாரணமாக கவிஞர் வாலி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்..
வாலி பாடல் எழுத வந்த தொடக்க காலங்களில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. அப்போது கவிஞர் வாலியும் நடிகர் நாகேசும் கிளப் கவுசில் தங்கியிருந்தனர்.
திரைப்பட பாடல் எழுதும் வாய்ப்பு எப்போதாவது வந்ததால் நிரந்தர வருமானம் இன்றி அவதிப்பட்டார் வாலி.
ஆதலால் திரைப்படப் பாடல் எழுதும் பணியை விட்டுவிட்டு மதுரையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்துக்கு கணக்கு எழுதும் பணிக்குச் செல்லலாம். அப்பணியில் மாதச்சம்பளம், சாப்பாடு உண்டு. நிரந்தர வருமானம் வரும் என்று முடிவு செய்து மதுரைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அந்நேரம் வாலியைச் சந்திக்க பாடகர் திரு.பி.பி.சீனிவாஸ் வந்தார். பணம் இன்றி கஷ்டப்படும் காலங்களில் வாலிக்கு பணம் கொடுத்து உதவுவார் பாடகர் பி.பி.சீனிவாஸ்.
பாடகரை வரவேற்ற கவிஞர் பேசிக் கொண்டிருக்கையில் “சமீபத்தில் என்ன பாடலை பாடினீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பி.பி.சீனிவாஸ் அவர்கள் சுமைதாங்கி என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொல்லி அதைப் பாடிக் காண்பித்தார்.
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு
என்று முழுப்பாடலையும் சீனிவாஸ் அவர்கள் பாடிக் காண்பித்ததும் மதுரை செல்லும் பயணத்தை நிறுத்தி விட்டார் வாலி.
தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்பதற்கு கவிஞர் வாலியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் நமக்கு எல்லாம் நல்ல பாடமாக அமையும்.
