மனித இரத்தம் பற்றிய தகவல்கள் :
இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும்.
இரத்தத்தின் பகுதிப் பொருள்கள்
இரத்தம் இரண்டு முக்கிய பகுதிப்பொருட்களான பிளாஸ்மா எனும் திரவப்பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கக் கூறுகளையும் (இரத்தசெல்கள்) கொண்டுள்ளது.
மொத்த இரத்தக் கொள்ளளவில் 55% பிளாஸ்மாவும், 45% ஆக்கத் துகள்களும் (இரத்த செல்கள்) உள்ளன.
70 கிலோ எடையுள்ள மனிதனில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு ஏறத்தாழ 5000 மிலி (5லி) ஆகும்.
இரத்தத்தின் ஆக்கக் கூறுகள்
இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும்.
இரத்தச் சிவப்பணுக்கள் (RBC) (அ) எரித்ரோசைட்டுகள்
இரத்த வெள்ளையணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்
இரத்தத் தட்டுக்கள் (platelets) (அ) திராம்போசைட்டுகள்
பிளாஸ்மா (Plasma)
பிளாஸ்மாவில், நீர் (80-92%) மற்றும் நீரில் கரைந்துள்ள பொருட்களான பிளாஸ்மா புரதங்கள், கனிமப் பொருள்கள் (0.9%) (Inorganic constituents), கரிமப்பொருள்கள் (0.1%) (Organic constituents) மற்றும் சுவாச வாயுக்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் நான்கு முக்கிய பிளாஸ்மா புரதங்களாவன
அல்புமின் (Albumin)
குளோபுலின் (Globulin)
புரோத்ராம்பின் (Prothrombin)
ஃபைப்ரினோஜன் (Fibrinogen) ஆகியவை
இரத்த செல்கள்:
இரத்தச் சிவப்பணுக்கள் – எரித்ரோசைட்டுகள்
இவை மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த செல்களாகும். இவை எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன.
சுவாச நிறமியான ஹீமோகுளோபினை RBC கொண்டுள்ளதால் இரத்தம் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பணுவில், செல் நுண்ணுறுப்புகள் மற்றும் உட்கரு காணப்படுவதில்லை.
இவை இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் உடையவை. இவற்றின் வாழ்நாள் 120 நாட்கள் ஆகும்.
இரத்த வெள்ளையணுக்கள் (WBC) லியூக்கோசைட்டுகள்
இவை நிறமற்றவை.
இவற்றில் ஹீமோகுளோபின் காணப்படுவதில்லை மற்றும் உட்கரு கொண்டவை.
இவை எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு போன்றவற்றில் காணப்படுகின்றன.
இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
துகள்களுடைய செல்கள்
துகள்களற்ற செல்கள்
துகள்களுடைய செல்கள்
இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன.
இவற்றின் உட்கருக்கள் ஒழுங்கற்றவை அல்லது கதுப்புக்களுடையவை.
மூன்று வகைப்படும்
நியூட்ரோஃபில்கள்
ஈசினோஃபில்கள்
பேசோஃபில்கள்
துகள்களற்ற செல்கள்
இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள் காணப்படுவதில்லை. இவை இரண்டு வகைப்படும்.
லிம்ஃபோசைட்டுகள்
மோனோசைட்டுகள்
(i) லிம்ஃபோசைட்கள்
மொத்த வெள்ளையணுக்களில் இவை 20% - 25% உள்ளன.
வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்ப்பொருளை உருவாக்குகின்றன.
(ii) மோனோசைட்டுகள்
இவை லியூக்கோசைட்டுகளிலேயே மிகப்பெரியவை.
இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.
இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள்
இரத்தத்தட்டுகள் திராம்போசைட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை எலும்பு மஜ்ஜையிலுள்ள சிறப்பு செல்களான மெகாகேரியோசைட்டுகளால் (Megakaryocytes) உற்பத்தி செய்யப்படுகின்றன
இவை அளவில் சிறியவை மற்றும் நிறமற்றவை. இவற்றில் உட்கரு இல்லை.
இவற்றின் வாழ்நாள் 8-10 நாட்களாகும்.
மனிதனின் ஒரு கனமில்லிமீட்டர் இரத்தத்தில் 2,50,000 – 4,00,000 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன.
இவை இரத்தஉறைதலில் ஈடுபடும் பொருட்களைச் சுரக்கின்றன.
காயங்கள் ஏற்படும் பொழுது இரத்த உறைதலை ஏற்படுத்தி இரத்தப்போக்கை தடுக்கின்றன.
இரத்தத்தின் பணிகள்
சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)
செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
ஹார்மோன்களைக் கடத்துகிறது.
நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.
நோய் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
உடலின் வெப்பநிலை மற்றும் pH-ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக செயல்படுகிறது.
உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.
இரத்தம் உறைதல் (Coagulation of Blood)
ஒரு காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு இரத்தக் கட்டி (Blood clot) உருவாகி அதிகமான இரத்தப் போக்கை நிறுத்தும் நிகழ்வே இரத்தம் உறைதல் (Coagulation / clotting of blood) எனப்படுகிறது.
இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதீலியம் சிதைவடைந்து அதன் சுவரிலுள்ள இணைப்புத் திசுக்களை இரத்தம் நனைக்கும் போது, இரத்த உறைதல் நிகழ்வு ஆரம்பமாகிறது.
இணைப்புத் திசுக்களிலுள்ள கொல்லாஜன் இழைகளுடன் இரத்த தட்டுகள் ஒட்டிக்கொண்டு இரத்த இழப்பைத் தடுக்கும் சில இரத்த உறைதல் பொருட்களை (காரணிகளை) வெளியிடுகின்றன.
இந்த இரத்த உறைதல் காரணிகள் (Blood clotting factors) பிளாஸ்மாவிலுள்ள இரத்த உறைதல் காரணிகளுடன் கலக்கின்றன.
செயல்படா நிலையிலுள்ள புரோத்ராம்பின் என்னும் புரதம், கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் K ஆகியவற்றின் முன்னிலையில் செயல்படு திராம்பினாக மாற்றமடைகிறது.
திராம்பின், இரத்தப் பிளாஸ்மாவில் கரைந்த நிலையிலுள்ள ஃபைப்ரினோஜனை, கரையாத ஃபைப்ரின் இழைகளாக்குகின்றன.
இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணைந்து இரத்தச் செல்களைச் சூழ்ந்து ஒரு வலைப்பின்னல் அமைப்பை உண்டாக்குகிறது.மேலும் ஃபைப்ரின் வலைப்பின்னல் காயம்பட்ட இரத்தக் குழலில் குணமாகும் வரை அடைப்பை ஏற்படுத்தி இரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஃபைப்ரினில் உள்ள நுண்ணிழைகள் சுருங்கி வெளிர் மஞ்சள்நிறச் சீரம் எனும் திரவத்தை வலைப்பின்னல் வழியே வெளியேற்றுகின்றது. (சீரம் (Serum) என்பது ஃபைப்ரினோஜன் இல்லாத பிளாஸ்மாவாகும்).
இரத்த உறைதலைத் தடைசெய்யும் இரத்த உறைவு எதிர்ப்பொருளான (Anticoagulant) ஹிப்பாரின், இணைப்புத் திசுக்களிலுள்ள மாஸ்ட் செல்களினால் உருவாக்கப்படுகிறது. இது சிறிய இரத்தக் குழாய்களில் இரத்த உறைதலைத் தடைசெய்கிறது.
இரத்த வகைகள்
காரல் லேண்ட்ஸ்டீனர் (1900) இரத்த வகைகளைக் கண்டறிந்தார். இவர் A, B மற்றும் O இரத்தவகைகளை அடையாளம் கண்டறிந்தார்.
டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி (1902) AB இரத்தவகையினை கண்டறிந்தனர்.
மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்ப்பொருள்கள் (ஆன்ட்டிபாடிகள்) காணப்படுகின்றன.
ஆன்டிஜென்கள் RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன.
எதிர்ப்பொருட்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுகின்றன.
ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம்.
இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.
‘A’ வகை: ஆன்டிஜென் A–RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி B – இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
’B’ வகை: ஆன்டிஜென் B–RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி A – இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
‘A B’ வகை: ஆன்டிஜென் A மற்றும் B–RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். அதற்கான ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்படாது.
’O’ வகை: ஆன்டிஜென் A மற்றும் B-RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படாது. இருந்த போதிலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.
இரத்தம் வழங்குதல்
இரத்தம் செலுத்துவதற்கு முன்னர் இரத்தம் வழங்குபவர் மற்றும் இரத்தம் பெறுபவருக்கு இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ளவேண்டும்.
பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.
AB இரத்த வகை கொண்ட நபரை அனைவரிடமிருந்து இரத்தம் பெறுவோர் வகை என அழைப்பர். இவர் அனைத்து இரத்த வகையினையும் ஏற்றுக்கொள்வார்.
O இரத்தவகை கொண்டநபரை ‘இரத்தக் கொடையாளி‘ என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.
Rh காரணி
Rh காரணி (D antigen) எனும் மற்றுமொரு புரதம் இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் பெரும்பாலான மனிதர்களில் (80%) காணப்படுகிறது.
இது ரீசஸ் குரங்கின் (Rhesus monkey) இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள புரதத்தை ஒத்துக் காணப்படுவதால் இவை Rh காரணி எனப் பெயரிடப்பட்டது.
இரத்தக்குழாய்கள்:
இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை,
தமனிகள்,
சிரைகள் மற்றும்
இரத்த நுண்நாளங்கள் ஆகும்.
இரத்த குழாயில் உள்ளீடற்ற அமைப்பும் அதைச்சுற்றி சிக்கலான சுவர்ப்பகுதியும் உள்ளன.
மனிதனின் இரத்தக்குழாயின் சுவர்ப்பகுதி தெளிவான மூன்று அடுக்குகளாலானது. அவை
டியூனிக்கா இன்டீமா (உள்ளடுக்கு)
டியூனிகா மீடியா (நடு அடுக்கு) மற்றும்
டியூனிகா எக்ஸ்டர்னா (வெளியடுக்கு) ஆகும்.
தமனிகள் (Arteries)
இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களுக்குத் தமனிகள் என்று பெயர்.
நுரையீரல் தமனியைத் தவிர, மற்ற தமனிகள் அனைத்தும் ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.
இதயத்திலிருந்து இரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பெரிய தமனி, பெருந்தமனி அல்லது அயோர்ட்டா (Aorta) எனப்படும்.
இரத்த நுண் நாளங்கள் (Capillaries)
இரத்த நுண்நாளப்படுகைகள் இரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும் தளங்களாகச் செயல்படுகின்றன.
அவற்றின் சுவர்கள் அரைச்சந்திர வால்வுகளால் பாதுகாக்கப்படுகின்றன.
இரத்த நுண்நாளங்களில் கலப்பு இரத்தம் (ஆக்ஸிஜன் நிரைந்த மற்றும் ஆக்ஸிஜனற்ற) காணப்படுகின்றது.
சிரைகள் (Veins)
மெல்லிய சுவரால் ஆன, அதிக உள்ளீடற்ற உட்பகுதியைக் கொண்ட இரத்த நாளங்களே சிரைகளாகும். எனவே இவை எளிதில் நீளும் தன்மையுடையவை.
இவற்றில் நுரையீரல் சிரையைத் தவிரப் பிற சிரைகளனைத்தும் உடலின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருபவையாகும்
சிரைகளினுள் உள்ள அரைச்சந்திர வால்வுகள் இரத்த ஓட்டத்தை ஒரே திசையில் செலுத்த உதவுகிறது. மேலும் இவ்வால்வுகள் இரத்தம் பின்னோக்கிப் பாய்வதையும் (Back flow) தடுக்கின்றன.