Friday, 27 October 2023

மனித நரம்பு மண்டலம்





 மனித நரம்பு மண்டலம்

அ .மைய நரம்பு மண்டலம் (CNS )
ஆ .புற அமைவு நரம்பு மண்டலம் (PNS )
இ .தானியங்கு நரம்பு மண்டலம் (ANS )
மைய நரம்பு மண்டலம்,மூளை,தண்டுவடத்தை உள்ளடக்கியது.இது செய்திகளை அலசுதல்,கட்டுப்பாடு போன்ற செயல்களின் மையம் ஆகும் .
மைய நரம்பு மண்டலத்தின் நரம்புகளை உள்ளடக்கியதே புற அமைவு நரம்பு மண்டலம் ஆகும் .
மைய நரம்பு மண்டலம் :மைய நரம்பு மண்டலம்,மூளை,தண்டுவடத்தை உள்ளடக்கியது.இவை மண்டையோட்டினுள்,முள்ளெலும்புக் கால்வாயினுள் பாதுகாப்பாக அமைந்துள்ளது .
மூளை உரைகள் :மைய நரம்பு மண்டலத்தைச் சுற்றி மூன்று பாதுகாப்பு உறைகள் உள்ளன அவை ஒட்டு மொத்தமாக மூளை உறைகள் (மெனின்ஜஸ்)என அழைக்கப்படுகின்றன .
மண்டையோடு,முள்ளெலும்புத் தொடருக்கு அடியிலும் மைய நரம்பு மண்டலத்திற்கு வெளியிலும் அமைந்துள்ள இரட்டைக் கடின உறைக்கு டியூராமேட்டர் என்று பெயர்.மெல்லியதும்,இரத்த நாளங்களைப் பெற்றதுமான நடு உறைக்கு அரக்னாய்டு உறை என்று பெயர் .
மூளையையும்,தண்டுவடத்தையும் சுற்றி நெருக்கமாக அமைந்துள்ள உட்புற மெல்லிய உறைக்குப் பையாமேட்டர் என்று பெயர் .
மூளை :மூளையே செய்திகளை ஆய்ந்தறியும் மைய உறுப்பு ஆகும்.மேலும்,அது கட்டளை மற்றும் கட்டுப்பாடு அமைப்பாகவும் செயல்படுகிறது.மற்ற முதுகெலும்புகளில் உள்ளதைப் போலவே,மனித மூளை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
1.முன் மூளை 2.நடு மூளை 3.பின் மூளை 
முன் மூளை:பெருமூளை,தலாமஸ்,ஹைப்போ தலாமஸ் ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது.
பெருமூளை:மூளையின் பெரும்பகுதியாக,பெரு மூளை அமைந்துள்ளது.(மூளையின் மூன்றில் இரண்டு பகுதியாகப் பெருமூளை உள்ளது )
ஆழமான நடுப்பிளவு,பெருமூளையை நெடுகுவாட்டத்தில் வலப்பக்கம்,இடப்பக்கம் என இரு பகுதிகளாகப் பிரிந்துள்ளது.பெருமூளையின் அரைக்கோளங்கள் அடிப்பகுதியில் கார்பஸ்கலோஸம் என்னும் நரம்புத் திசுப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது .
பெருமூளையின் வெளிபுறப்பகுதிக்குச் சாம்பல் நிறப்பகுதி அல்லது பெருமூளைப் புறணி என்று பெயர் .உட்புறப்பகுதிக்கு வெண்மை நிறப்பகுதி என்று பெயர் .
பெருமூளைப் புறணி :இது நரம்புச் செல் உடலங்களைக் கொண்ட பல அடுக்கு சாம்பல் நிற நரம்புச் செல்களால் ஆனது.இது சாம்பல் நிறம் பெற்றியிருப்பதனால் இது சாம்பல் நிறப்பகுதி எனப்படும்.மனிதனின் பெருமூளைப் புறணியின் அதிகப்படியான புறப்பரப்பு மடிப்புகளுற்றுப்,பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும்.இந்தச் சுருக்கங்கள் மேடு(கைரி)பள்ளங்களை(சல்சி)கொண்டுள்ளன.
பெருமூளைப் புறணியில் அமைந்துள்ளவை 
அ .இயக்கப் பகுதிகள் 
ஆ .உணர்வுப் பகுதிகள் 
இ .இணைப்புப் பகுதிகள்(உணர்வு,இயக்கப் பகுதி அல்லாதவை)
இயக்கப் பகுதிகள் :இயக்கப் பகுதிகள் என்பவை பெருமூளையின் கட்டளை மற்றும் ஒழுங்கு படுத்தும் பகுதி ஆகும்.நம் உடலின் பல்வேறு உறுப்புகளின்
செயல்களைக் கட்டுப்படுத்தக் கட்டளைகள் இங்கிருந்துதான் தோன்றுகின்றன.இச்சை செயல்களும் இங்கிருந்தே தொடங்குகின்றன.
உணர்வுப் பகுதி:இஃது உணர்வு உறுப்புகள் பெறும் உணர்வுத் தூண்டல்களை,உணர்ச்சி நரம்பின் வழியே பெறப்படும் இடமாகும் .
இணைப்புப் பகுதி:பல்வேறு உணர்தலுக்கு இடையேயான தொடர்பு நினைவாற்றல்,தகவல் பரிமாற்றம் முதலிய சிக்கலான பணிகளுக்குப் பொறுப்பேற்கும் பகுதி இணைப்புப் பகுதியாகும்.
பெருமூளையின் வெண்மைப் பகுதி:பெருமூளைப் புறணியின் அடிப்பகுதியில் காணப்படும் உட்புறப்பகுதி வெண்மைப் பொருள் ஆகும்.இது மையலின் உறையால் போர்த்தப்பட்ட நரம்பு நாரிழைகளால் ஆனதால் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.இதில் சில நரம்பு நாரிழைக் கற்றைகள்,பெருமூளையின் பல்வேறு பாகங்களை இணைகின்றன.ஆனால்,சில நாரிழைகள்,பெருமூளையை எஞ்சியுள்ள மூளையுடனும் தண்டுவடப் பகுதிகளுடனும் இணைக்கின்றன .
பெருமூளையின் அரைக் கோளங்களுக்குள் உள்ள குழிகளுக்கு வெண்ட்ரிக்கிள்கள் என்று பெயர்.இக்குழிகள்,மூளைத் தண்டுவட திரவம் என்னும் ஒருவகை ஊட்டத்திரவதால் நிரப்பப்பட்டுள்ளன .
பெருமூளையின்பணிகள்:பெருமூளை,உணர்வு,அறிவுக்கூர்மை,நினைவாற்றல்,கற்பனைத்திறன்,காரண காரியம் ஆய்ந்தறிதல் முதலியவற்றின் இருப்பிடமாகத் திகழ்கிறது.இஃது உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து உணர்வுத் தூண்டல்களைப் பெற்று இச்சை செயல்களைத் தொடங்கி வைக்கின்றது .பெருமூளையின் குறிப்பிட்ட பகுதிகள் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதோடு,தொடர்பையும் ஏற்படுத்துகின்றன.இவ்வாறு கேட்டல்,பார்த்தால்,சுவையறிதல்,நுகர்தல்,பேசுதல் போன்றவற்றிற்கெனத் தனித்தனியே மையங்கள் உள்ளன.பெருமூளையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் தேசம் அந்தப் பகுதிக்கான பணிகளைச் செய்ய இயலாத நிலை ஏற்படும் . 
தலாமஸ் :தலாமஸ் என்ற அமைப்பைச் சுற்றி பெரு மூளை சூழ்ந்துள்ளது.உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கியப் பணியை இது செய்கிறது .
ஹைப்போதலாமஸ் :இது தலாமஸின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.இஃது உடல் வெப்பநிலை,உண்ணுதல்,நீர் பருகுதல் போன்றவற்றிற்கான உந்துதல்,பாலுறவு நடத்தையை ஒழுங்குபடுத்தல்,கிளர்ச்சி,சினம்,பயம்,தூண்டுதல் போன்ற மனவெழுச்சி வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்தும் செயல்களைச் செய்கிறது .
நடுமூளை:தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் நடுமூளை அமைந்துள்ளது பெருமூளை குழல் என்ற கால்வாய் நடுமூளையின் ஊடே செல்கிறது.நடுமூளையின் முதுகுப் பக்கத்தில் நான்கு அரைவட்டக் கோளங்கள் காணப்படுகின்றன.அவை கார்போரா குவாட்ரிஜெமினா ஆகும்.இது பல்வேறு பார்த்தலின் அனிச்சை செயல்களையும்,பார்வையின் சார்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல்,ஒழுங்குபடுத்தல் போன்ற செயல்களையும் செய்கிறது.
நடுமூளை,பின்மூளை இரண்டும் சேர்ந்து மூளைத்தண்டு என அழைக்கப்படுகிறது.
பின் மூளை :பான்ஸ்,சிறுமூளை,முகுளம் ஆகியவை பின்மூளையில் காணப்படுகின்றன.
சிறுமூளை:இது பெருமூளைக்குக் கீழ்புறமாக அமைந்துள்ளது.சிறுமூளையில் மையப் பகுதி இரண்டு பக்கவாட்டுக் கதுப்புகளுடன் காணப்படுகின்றன.சிறுமூளை,நடத்தல் அல்லது ஓடுதல் போன்ற இயக்குதசைகளின் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது .
பான்ஸ் :சிறுமூளையின் கதுப்புகளை இணைக்கும் நரம்பு நாரிழைப் பாலம் பான்ஸ் ஆகும்.இது பெருமூலையிலிருந்து சிறுமூலைக்குச் செய்திகளைக் கடத்துகிறது.இதில் அமைந்துள்ள பிற மையங்கள்,உறக்கம்,சுவாசத்திற்கானவை ஆகும் .
முகுளம் :தண்டுவடத்தோடு இணையும் மூளையின் கடைசிப் பகுதி முகுளம் ஆகும் மேலேறும் மற்றும் கீழிறங்கும் நரம்புப் பாதைகளை ஒருங்கிணைக்கும் வழித்தடமாக முகுளம் செயலாற்றுகிறது.இத்தியத்துடிப்பு,இரத்தக்குழல்கள் சுருக்கம்,மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக முகுளம் செயல்படுகிறது.
முகுளத்தின் வெண்ட்ரிக்கிள் பெருமூளை அரைக்கோள வெண்ட்ரிக்கிள்களுடன் இணைந்துள்ளது .
தண்டுவடம் :மூளையின் தொடர்ச்சியான குழல் போன்ற அமைப்பான தண்டுவடம்,முள்ளெலும்பின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது .
மூளையை போன்றே தண்டுவடமும் பையாமேட்டர்,அரக்னாய்டு சவ்வு ,டியூரா மேட்டர் எனப்படும் மூளைச்சவ்வுகளால் மூடப்பட்டுள்ளது.இரு இடங்களில் தண்டுவடம் அகன்றுள்ளது.அவை முறையே கழித்துபுடைப்பு,இடுப்புப்புடைப்பு எனப்படும்.தண்டுவட நரம்புகள் இந்தப் புடைப்புகளிலிருந்து தோன்றுகின்றன.இடுப்புபுடைப்புக்கு கீழ் தண்டுவடம் குறுகி கூம்பு போன்ற அமைப்பை பெறுகிறது.இதற்க்கு கோனஸ் மெடுலாரிஸ் என்று பெயர்.தண்டுவடத்தின் கீழ்முனை நாரிழைபோல் காணப்படுவதற்கு பைலாடெர்மினேல் என்று பெயர்.அதன் பிறகு தண்டுவடம் குதிரைவால் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.இதற்கு காடா ஈக்வினா அல்லது குதிரைவாலி நீட்சி என்று பெயர் .தண்டுவடத்தின் முதுகுப் பக்க மையப் பகுதியில் குறுகலான,பள்ளமான முதுகுப்பக்கப் பிளவு காணப்படுகிறது.மார்புப் பக்க மையப் பகுதியில் அகன்ற பள்ளமான மார்புப் பக்கப் பிளவு காணப்படுகிறது .
தண்டுவடத்தின் மையப்பகுதி நெடுகிலும்,மூளைத் தண்டுவடத் திரவத்தால் நிரப்பப்பட்ட மையக் குழல் பரவி இருக்கிறது.இது மூளையின் வெண்ட்ரிக்கிள்களின் தொடர்ச்சியாகும்.தண்டுவடத்தின்,புறப்பகுதி மெடுல்லா உறையுள்ள வெண்மை நிற நியூரான்களாலும் உட்பகுதி மெடுல்லா உறையற்ற சாம்பல் நிற நியூரான்களாலும் ஆக்கப்பட்டுள்ளது .
மூளைக்குள்ளும்,வெளியேயும் நரம்புத் தூண்டல்களைக் கடத்துவதாகவும்,அனிச்சை செயலின் மையமாகவும் தண்டுவடம் செயலாற்றுகிறது .
புறஅமைவுநரம்புமண்டலம் (PNS )
மூளைத் தண்டுவடத்திலிருந்து உருவாகும் நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தைத் தோற்றுவிக்கின்றன .
அ .கபாலநரம்புகள்/மூளைநரம்புகள்:
மூளையிலிருந்து 12 இணைக்க கபால நரம்புகள் உருவாகின்றன.சில கபால நரம்புகள் உணர்ச்சி நரம்புகளாக செயல்புரிகின்றன.(உணர் உறுப்புகளிலிருந்து நரம்புத் தூண்டல்களை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன .எ .கா .கண்ணிலிருந்து தோன்றும் பார்வை நரம்புகள் )சில கபால நரம்புகள் இயக்கு நரம்புகளாகச் செயலாற்றி,மூளையிலிருந்து செயலாற்றும் உறுப்புகளுக்கு நரம்புத் தூண்டல்களை எடுத்துச் செல்கின்றன. 
எ .கா . கண்கோளத்தைச் சூழ்ந்துள்ள தசைகளில் ஊடுருவி கண்ணிற்கு வருகின்ற இயக்க நரம்பு .சிலவகைக் கபால நரம்புகள் கலப்பு நரம்புகள் ஆகும்.இவை உணர்ச்சி மற்றும் இயக்க நரம்புகளாகச் செயல்படுகின்றன.எ .கா .முக நரம்புகள்,வேகஸ் நரம்பு.
ஆ .தண்டுவடநரம்புகள் :தண்டு வடத்திலிருந்து 31 இணைத் தண்டுவட நரம்புகள் உருவாகின்றன.ஒவ்வொரு தண்டுவட நரம்பும் உணர்ச்சி வேர்களையும் இயக்க வேர்களையும் கொண்டுள்ளன.எனவே அனைத்துத் தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகளாகக் கருதப்படுகின்றன .
தானியங்கு நரம்பு மண்டலம் (ANS )
தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள பிரிவு நரம்புகளும் எதிர்ப்பிரிவு நரம்புகளும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்பட்டு,நம் உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன .

No comments:

Post a Comment

மனித இரத்தம்

  மனித இரத்தம் பற்றிய தகவல்கள் : இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும் .  இரத்தத்தின்  பகுதிப்  பொருள்கள்  இரத்தம்  ...