“உன்னையே நீ அறிவாய்”
ஒரு சாதாரண குடும்பத்தில் தான் பிறந்தார் சாக்ரடீஸ் ஏழ்மையில்தான் வளர்ந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார். சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தது. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அற்புதமானது.
பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார் சாக்ரடீஸ் .
“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள் என்ற சிந்தனையை நமக்கெல்லாம் தூண்டியவர் சாக்ரடீஸ் தான்..
நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றலாமா? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்களின் வாரிசுகளே பல தலைமுறையாக மக்களாட்சி என்ற பெயரில் முடியாட்சி நடத்துகின்றனர் இது சரியா ? நாமும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப் போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் இந்த வையகமே நம் வசப்படும்.

No comments:
Post a Comment